லியோ: 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை!

By Priyadarshini

லியோ படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு காலை 7 மணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று படத் தயாரிப்பு தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. 

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை (19, அக்டோபர் 2023) வெளியாகிறது. இந்த திரைப்படத்துக்கு முதல் நாள் முதல் காட்சியை காலை 7 மணிக்கு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பு தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு அரசுக்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து நேரில் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டது. இதன் படி காலை 7 மணிக்கு படத்தைத் திரையிட அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாடு அரசு காலை ஏழு மணி காட்சிக்கு அனுமதி வழங்க மீண்டும் மறுத்துவிட்டது. வழக்கமான காட்சிகளைக் காட்டிலும் காலை 9 மணிக்கு திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கப்பட்டது. அதற்கு மேல் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகக் காலை 7 மணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆந்திராவிலும் புதுச்சேரியிலும் காலை காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் லியோ தமிழ் படம் காலை 5 மணிக்கு திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கு லியோவை 20ம் தேதி வரை திரையிடுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் டைட்டில் பிரச்னையை காரணம் காட்டி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.
மேலும்