இந்தி சினிமா பாட்டு மேலே தமிழர்களுக்கு வெறி பிடிக்க வெச்சது இவர்தான்.. இந்த இசைக்கடவுள் இந்தித் திரையுலகில் முப்பதாண்டு காலம் துவம்சம் செய்தவர். நம்ம ஊர் எம்எஸ்வியைபோல நடிக்க ஆசைப்பட்டு வந்து இசையமைப்பாளரா மாறியவர்.இப்பவும் நார்த் இண்டியாவுக்கு பயணம் மேற்கொண்டால் எங்கேனும் சாலையோர தேநீர் விடுதிகளிலோ, வயற்காட்டின் நடுவே இருக்கும் மண் குடிசைகளிலோ ரேடியோக்களிலிருந்து இவர் இசையமைத்த பாடல்கள் காற்றில் கரைந்த வண்ணம் இருக்கும்.
கோடம்பாக்க சினிமாவில் இளையராஜாவின் வருகைக்கு முன், எம்.எஸ்.விஸ்வநாதன் இங்கு தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தச்சே, எஸ்.டி பர்மனும் நௌஸாத்தும் எல்லை தாண்டிய மியூஸிக்கல் வார் ஒன்றை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருந்தாய்ங்க. ஆம்... தமிழ்நாட்டில் ஒவ்வொரு டீக்கடையிலும், பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல் இடம் பெற்ற படம் 'ஆராதனா'. (இதுபற்றி இளையராஜாவே ஒரு பேட்டியில் சிலாக்கியமா சொல்லியிக்காறார்) ராஜேஷ் கன்னா- ஷர்மிளா தாகூர் நடிப்பில் 1969-ல் வெளியான இப்படம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிச்சு. தென்னிந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டி பரபரப்பாகப் பேசப்பட்டுச்சு.
தன் இந்தி இசையால் வெற்றித் தடம் பதித்த முதல் வடஇந்திய இசையமைப்பாளர் என சச்சின் தாதாவைத் தாராளமாகச் சொல்லலாம். தாதா என்பது பாலிவுட் செல்லமாக வைத்த பட்டப்பெயர். நிஜப்பெயர் சச்சின் தேவ் பர்மன்... சுருக்கமாக எஸ்.டி.பர்மன்! வயது வித்தியாசமின்றி இப்போதும் பலரின் ப்ளே லிஸ்ட்டில் தாதாவின் பாடல்கள் இருப்பதால், `ஸ்பாட்டிஃபை', `ஜியோ சாவன்', `கூகுள் மியூஸிக்' போன்ற இசைக்கென உள்ள பிரத்யேக தளங்களில் இவரின் இசை அதிகம் பேரால் கேட்கப்பட்டு, ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது. அதுதான் தாதாவின் வெற்றி!
ஃபிலிமிஸ்தான் ஸ்டூடியோ' அப்படீங்கற சினிமா நிறுவன அதிபர் சஷாதர் முகர்ஜியின் வேண்டுகோளை ஏற்று பாலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டார் அசோக் குமாரின் இரண்டு படங்களுக்கு 1944-ல் இசையமைச்சார். புதுமையான இசையமைப்பு பாணி பலரை வியப்பில் ஆழ்த்திபுடுச்சு. 1947-ல் சுதந்திர இந்தியாவின் முதல் ஹிட் சினிமாவான 'தோ பாய்' படத்தின் இசையமைப்பாளராக வரலாற்று வெற்றியைப் பெற்றார். அந்தப் படத்தின் 9 பாடல்களும் அந்நாள்களில் `இந்திய சினிமாவின் புதிய இசை' எனக் கொண்டாடப்பட்டுச்சு.
அதிலும் முதல் மூன்று படங்கள் தாதாவுக்குப் பல்வேறு விருதுகளைப் பெற்று தந்துச்சு. தாதாவின் மானசீக குருவான நௌஷாத் இசையமைப்பில் பாடிக்கொண்டிருந்த லதா மங்கேஷ்கரைப் பல இசையமைப்பாளர்கள் 'குரல் மென்மையாக இருக்கிறது' என புறக்கணிச்சபோது, தொடர்ந்து தன் படங்களில் அம்புட்டுப் பாடல்களையும் பாட வைச்சு எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தார் பர்மன்.
கிஷோர் குமார் - முகமது ரஃபி - லதா மங்கேஷ்கர் - ஹேமந்த் குமார் என்ற நால்வர் கூட்டணியை வைத்து பாட்டுலகில் பெரும் ராஜ பாட்டையை நிகழ்த்திக் காட்டினார் தாதா. ஹார்மோனியப் பெட்டியோ வேறு எந்த வாத்தியக் கருவிகளோ இல்லாமல் கைகளைத் தட்டி அவர் டியூன் போட்ட முறை திரையுலகில் இருந்தவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 'இதெல்லாம் சில பட அதிசயம்... மிஞ்சிப்போனால் இன்னும் ரெண்டு படங்கள் தாங்குவார்!' எனப் பலர் விமர்சனம் என்ற பெயரில் குத்திக் கிழிச்சாய்ங்க. ஆனால், இன்னும் பல ஹிட் பாடல்களை தன் வெற்றிக் கணக்கில் சேர்த்துக் கொண்டே போய் அதற்குப் பதிலடி கொடுத்தார் இந்த இசை தாதா!
அவரது படைப்பூக்கத்தின் உச்சம் என்று 1957-ல் ரிலீசான குரு தத்தின் 'பியாஸா' படத்தை சொல்லலாம். முகமது ரஃபியின் குரலில், 'ஹம் ஆப்கே ஆங்கோன்', 'யே துனியா அகர்', 'ஜானே வோ கெய்ஸே' உள்ளிட்ட எல்லா ஸாங்கு மிகப்பெரிய ஹிட்டாகின. சொல்லப் போனால், குரு தத்தின் மிகச் சிறந்த இயக்கத்திலும் நடிப்பிலும் வந்த பியாஸா வெறித்தனமான உழைப்புக்கும், மிகச் சிறந்த கலைக்கும் இன்று வரை இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு அந்தப் படத்தின் இசையும் ஒரு காரணம்தான். குரு தத்துக்கு மிகப்பெரிய மரியாதையைப் படத்தின் இசையால் எஸ்.டி.பர்மன் கொடுத்திருந்தார் என்பதே நிதர்சனம்!
தேவ் ஆனந்தின் 'கைடு', 'பம்பாய் கா பாபு', 'தேரே கர் கே சாம்னே',' `ஜூவல் தீஃப்' போன்ற படங்கள் எல்லாம் எஸ்.டி.பர்மனின் இசைக்காகவே கொண்டாடப்பட்ட படங்கள். இவ்வளவுக்கும் 60களில் கடுமையான ஆஸ்துமா பிரச்னையில் அவதிப்பட்டாலும்கூட பிஸியாக ரெக்கார்டிங்குகளில் நாள்களைக் கழித்தார் தாதா. குடும்பத்தினர் இவரை உரிமையோடு கோபித்தாலும் கூட இவரின் இசைத் தாகம் தணியவில்லை.
"உடல்நிலை சரியில்லை என்றால் நாம் ஓய்வெடுப்போம். ஆனால், தாதா ரெக்கார்டிங்கில் மூழ்கிக் கிடப்பார்! அவரது வலி நிவாரணி இசைதான்!" அப்படீன்னு முன்பு ஒருமுறை பாடகர் கிஷோர் குமார் தாதா பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்த அளவுக்கு இசையைத் தவிர வேறு ஒன்றை அறியாதவராய் இருந்தார் தாதா. அந்த அறியாமை அவரே தனக்குத்தானே இட்டுக்கொண்ட கவசம் எனலாம். "ரெக்கார்டிங் இல்லாத பொழுதுகளை அவர் விரும்புவதில்லை" என்கிறார் அவரை நன்கு புரிந்து வைத்திருந்த மனைவி மீரா தாஸ் குப்தா. கணவரின் பெங்காளி படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் இவர்!
பேயிங் கெஸ்ட், பியாசா, சல்டினாம் காடி, காலாபாணி, தேரேகர்கே சாம்னே, பாந்தினி, கைடு. ஜுவல்தீஃப், ஒட்டு மொத்த இந்தியாவையும் பாட்டு பைத்தியம் பிடிக்க வைத்தஆராதனா..அபிமான், சுப்கே சுப்கே.. அட போங்கப்பா அது பெரிய லிஸ்ட்...1975ல் இறக்கும்வரை இந்தித் திரையுலகை ஆட்டிப்படைத்தவர்..
இசை.இசை.இசை என ரத்ததிலேயே ஊறிப்போனதாலே என்னமோ இவருக்கும் பிறந்ததும் இன்னொரு இசை மேதையாகி இந்தி திரையுலகையே இளமை துள்ளலோடு எகிறவைத்தது. அந்த பிள்ளை, வேற யாரு ஆர்.டி.பர்மன்தான்.. இந்த பதிவை படித்தால் எதுவுமே புரியாதவர்கள், அவரின் பாடல்களை தேடிப்பிடித்து கேட்டுப்பாருங்கள்.
இப்படி இசையாகவே வாழ்ந்த தாதா மரணத் தறுவாயிலும்கூட ரெக்கார்டிங் அறையில் பிஸியாக இசையமைக்கும் பணியில் மூழ்கிக் கிடந்தார். தன் இசையில் அதிக பாடல்களைப் பாடிய கிஷோர் குமாரை 'மை சன்' என்று அன்போடு அழைக்கும் அளவுக்குப் பாசத்தோடு இருந்தார். அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான `மிலி' படத்தில் இடம்பெற்ற 'படி ஸூனி ஸூனி ஹே!' பாடல்தான் அவர் கடைசியாக இசையமைத்தது. அந்தப் பாடல் ஒலிப்பதிவின் போதுதான் மயக்கமாகி கோமாவுக்குப் போயிருக்கிறார். மருத்துவமனையில் சில நாள்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் 1975 அக்டோபர் 31-ம் தேதி பிரிஞ்சுது.