பாடகி ஜானகி தனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஒன்றை கச்சேரிகளில் பாடியதில்லை என்று சொல்லிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு, ஆன எந்த கச்சேரிலயும் பாட மாட்டேன்: கணவரை நினைத்து கலங்கிய எஸ்.ஜானகி!
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 17 மொழிகளில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பாடல்களை அவரே எழுதி பாடியதாகவும் சொல்லப்படுகிறது. ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் 1957-ஆம் ஆண்டு வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பாடகி ஜானகியின் புகழ் ’சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலின் மூலம் உலகம் எங்கும் பரவியது. இதையடுத்து எக்கச்சக்கமான பாடல் வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது. தனது குரலால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பாடகி ஜானகி அனைத்து வயதினருக்கும் ஏற்றார் போல் பாடல்களை பாடக் கூடிய வல்லமை படைத்தவர்.
6 வயது குழந்தை முதல் 60 வயது கிழவன் என தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடும் திறமை கொண்டவர். ‘கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே’ என்ற பாடலில் 2 வயது குழந்தை போலவும், ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலில் இளம்பெண் குரல் போன்றும் பாடல்களை பாடியுள்ளார்.
இளம் வயதில் உதிரிப்பூக்கள் படத்தில் இடம்பெற்றிருந்த 'போடா போடா போக்கை ' என்ற பாடலை முதியவர் குரலில் பாடி அசத்தியிருப்பார். இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார் . எம் எஸ்வி, ஏஆர் ரஹ்மான் என அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார்.
வசீகர குரல் மூலம் ரசிகர்களை மயக்கிய இவர் இரண்டு முறை தமிழ் பாடல்களுக்காகவும், ஒரு முறை மலையாளம் மற்றும் ஒரு முறை தெலுங்கு பாடலுக்கு என 4 தேசிய விருதை வென்றுள்ளார். பாடகி ஜானகிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மேலும், தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த 1959- ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை பாடகி ஜானகி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். ஜானகியின் கணவர் ராம் பிரசாத் 1997-ஆம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில், தான் இதுவரை இந்த பாடலை கச்சேரிகளில் பாடியதே இல்லை என்று பாடகி ஜானகி தெரிவித்துள்ளார்.
பாடகர் மனோ தொகுத்து வழங்கிய மனதோடு மனோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, “என் கணவர் எப்போதும் என் பக்கத்தில் தான் இருக்கிறார். அவரை பாக்கமுடியவில்லையே என்று அழுகை வரும். 'கண்ணா வா கவிதை சொல்வேன்’ பாடலை நான் எப்போதும் பாடியது இல்லை. ஒரு கச்சேரியிலும் நான் இந்த பாட்டை பாடியது இல்லை. அப்போது நான் தெரியாம பாடினேன். இப்போது பாடுவதில்லை. அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த பாடலை பாடினால் எனக்கு அழுகை வரும்” என்றார்.