சின்ன சின்ன திருட்டுக்காக ஜெயிலுக்கு சென்று வரும் பகத் பாசில் ஒரு வீட்டில் திருட முயல, அங்கு சங்கிலியால் கட்டப்பட்ட அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயாளியான வடிவேலுவை பார்க்கிறார். தன்னை காப்பாற்றினால் 25 ஆயிரம் ரூபாய் தருவதாக கூற, ஏடிஎம் க்கு கூட்டிப் போகிறார் பகத். அங்கு வடிவேலு வங்கி கணக்கில் ரூ 25 லட்சம் இருப்பதை தெரிந்து அதை ஆட்டையை போட திட்டமிடுகிறார்.
இதன் பிறகு ஏ.எடி.எம் பின் நம்பரை பகத் பாசில் தெரிந்து கொண்டாரா? பணத்தை வடிவேலு இழந்தாரா? இல்லை இவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்களா? அப்படி தானே கதை போகும் என்று நினைப்போம்? ஆனால் இங்கு கதை வேறு திசை நோக்கி பயணிக்கிறது. (அதற்காக இடைவேளை வரை இழுத்திருக்க தேவையில்லை).
திருடனாக பகத் பாசில், கலகலப்பான கேரக்டர் அனாயசமாக செய்து விட்டு போகிறார். அந்த 25 லட்சம் தான் இந்த 25 லட்சம் என வடிவேலு சொல்லும் போது, அவர் முகபாவம் செம. வடிவேலுவை பற்றி தெரிய வரும் போதும் அவரின் நடிப்பு அருமை. முதல் பாதியில் ரசிகர்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டதில் பெரும் பங்கு இவருக்கு தான்.
ஞாபகமறதிக்காரராக வடிவேலு, சற்று வயதான தனக்கே உரிய, வழக்கமான மேனரிசம், டயலாக் டெலிவரி, காமெடி என எதையும் வெளிப்படுத்தாமல் கதைக்கு தக்கபடி நடித்து இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவர் கேரக்டருடன் நாமும் ஒன்றி விட முடிகிறது.
வடிவேலு மனைவியாக சில சீன்களில் வந்தாலும் சித்தாரா மனதில் நிற்கிறார். போலீஸ் அதிகாரியாக கோவை சரளா அந்த கேரக்டர் சுத்தமாக செட்டாகவில்லை. சின்ன கேரக்டராக அறிமுகம் ஆகி, கிளைமாக்சில் மிரட்டியிருக்கிறார் விவேக் பிரசன்னா.
யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை ஓகே. நேத்து ஒருத்தரை ஒருத்தரை பார்த்தோம் ரீமிக்ஸ் சாங் சூப்பர். பயணம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கேமரா வொர்க் ஓகே.
ஃபிளாஷ் பேக் காட்சிகள் சட்டென எகிறி குதித்து ஓடி விடுகிறது. இறக்கும் கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். ஜீபிஎஸ் சிசிடிவி என்று இவ்வளவு டெக்னாலஜி இருந்தும் போலீஸ் கிளைமாக்ஸில் வந்து கைது செய்வது ஆதிகாலத்து ரீலு.
படத்தில் வரும் சின்ன சின்ன டுவிஸ்ட், காமெடி என இறுதி வரை ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குனர். பகத், வடிவேலு இவர்களோடு சேர்ந்து நாமும் *பைக்'கில் ஒரு டிரிப் வரலாம்.