நடிகர் சரத்பாபு பிறந்த நாள் பதிவு

By மினி சினி

"முள்ளும் மலரும் "படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ஒரு உலர்சாகசம். இன்றில்லை இன்னும் நூறு நூற்றாண்டுகள் கழிந்தாலும் இந்த பாடல் அப்படியே இருக்கும். எப்போது எவர் வந்து கேட்டாலும் உள்ளம் திறக்கும் கள்ளச்சாவி இந்தப் பாடல். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் ஜே.மகேந்திரன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான மாபெரும் கலைப்பேழை முள்ளும் மலரும். ஷோபாவின் கண்களும் சரத்பாபுவின் குறுநகையும் நகலெடுக்க முடியாத சித்திரங்கள்.

மலைப்பாதையில் வளைந்து வளைந்து செல்லுகிற ஜீப். அந்த பயணத்தை பாடலை பார்க்கிறவர்கள் உணரும் வண்ணம் எடுத்தது இயக்கத்தின் ஒளிப்பதிவின் வெற்றி என்றால் அதே உணர்தலை கேட்பவர்களுக்கு கடத்தி தந்தது இசையின் மகாவித்தகம்!

பாடல் துவங்குவதற்கு முன்பே ஒரு வினோதத்தை உட்பதிந்த மனோநிலையாக கேட்பவருக்குள் படர்த்தி விடுவார் இளையராஜா.மெலிதான சோகம் மழை தீர்ந்து தொடர்கிற பனி போல் எப்போதும் உறைந்து கசியக் கூடிய கலயம் ஜேசுதாஸின் குரல். இந்த பாடலை சன்னமான மகிழ்தலோடு அணுகச் செய்திருப்பார் ராஜா.

ஆரம்ப இசையே வனம் நெடுக விரவிக் கிடக்கிற கணக்கற்ற இலைகளின் புரளலாய்ப் பரவும்!
அம்மம்மா ஆனந்தம் என்ற சொல் கேட்கும் போதே மெல்லிய ஆனந்தத்தின் தோற்றுவாய் நமக்கெல்லாம் புரிபடும்.

மெல்லிய ஆனந்தத்தை தொடர்ந்து முதல் சரணத்துக்கு இட்டுச் செல்கிற இசையை உற்றுக் கவனித்தால் மலையின் சுற்றுவட்டத்தில் கொஞ்சம் உயரத்துக்கு அப்பால் தொடங்குகிற ஊசலாட்டத்துக்கு ஏற்ப உற்சாகத் துள்ளலிசையை கொண்டு அமைந்திருப்பதை உணரலாம் தாளக் கருவிகளும் குழலிசையும் பின் தொடரும் கிண்கிணிகளும் நிறைகிற இடத்தில் சரணம் பெருகும்!

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ 
ஆசைக்குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது என்ற வரியை தொடர்ந்து..

காடுகள் மலைகள் தேவன் கலைகள் என்ற இடத்தில் மாபெரிய நிம்மதியை நிற்கதியை போய் சேரும் சரணகானம்!

சர்-ரியலிசத்தை திரைப்பாடல் வரி ஒன்றில் அதுவும் 1978 ஆம் ஆண்டு எழுதிக் காட்டிய கவிஞர் கண்ணதாசனாக மட்டுமே இருந்திட முடியும்!

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் என்ற வரி.. அதில் நுழைந்து எத்தனையோ முறைகள் திரும்பவியலாமல் அப்படியே சரிந்திட செய்யும் மந்திர வித்தை கொண்டது! ஒரு காலகட்டத்தையே தன் பிடியில் ஆழ்த்தி பரவசம் செய்த மாயகானம் அல்லவா இந்தப் பாடல்..?

""ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் 
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் ""...

என்றாகும் போது நம்ப முடியாத நடுக்கமொன்று மனதில் படர்ந்து விலகுகிறது தானே..?வனத்தை அதனுள் அலையும் நாடோடிக் காற்றை அதன் எல்லையில்லா பரிசுத்தத்தை வேறு எதையும் ஈடு செய்ய முடியாத காட்டின் அழகை இன்னபிறவற்றை எல்லாம் தன் படிகச் சொற்களை கொண்டு பேசி முடித்த பாடல் இது. இந்த பாடல் முழுவதிலும் வெவ்வேறு இசைக்கருவிகள் அவற்றுக்கான கோர்வைகள் எளிதென்று சொல்லவியலாத கடினச்சொற்கள் அவற்றுக்கான தொனிமாற்றங்கள் என எல்லாவிதத்திலும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் அடங்கிய பாடலாக "செந்தாழம் பூவில் "அமைந்தது.

""இளைய பருவம் நேரில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் தந்த வர்ணனை 
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி""

இதழை வருடும் பனியின் காற்று என்ற ஒரு வரி ஒலித்தடங்குவதற்குள் பின்னலிடாத கூந்தல் பேரழகு காற்றில் அலைய கையில் ஒரு பூவை தாங்கிய படி தோன்றுவார் ஷோபா. இந்த பாடலுக்குள் சர்வ நிச்சயமாக ஷோபாவின் ஆன்மா அதன் ஒரு துளி சிறு பிரதியேனும் இருந்தே தீரும். ஷோபா எனும் மகா நடிகையை அவரது படங்களின் வழியாக அறிந்து கொண்ட போது அவர் வேறொரு வானின் தாரகையாக வெகுதூரம் சென்றுவிட்ட பறவையாக மாறி இருந்தார்.

இத்தனை இறைத் தன்மை இசையின் வழியே மாத்திரம் சாத்தியம். அது இளையராஜாவின் மேதமை. சொற்களை கொண்டு ஒரு வேள்வியே நடத்தினார் கண்ணதாசன் அது அவரது புலமை. ஜேசுதாஸ் தான் கரைந்து இந்த பிரபஞ்ச மொத்தத்தையும் கரைத்தார் அது அவர் குரலின் வலிமை மொத்தத்தில் இந்த பாடல் வெறும் பாடலல்ல. ஒலிவடிவிலொரு தியானம்!

ஆத்மார்த்தி

மலையில் பயணம்... மிக அற்புதமாய்  வர்ணனை.. வருடும் வார்த்தைகளில் கவர்ந்திடும் கவியரசரின் கவிநயம் அழகு. எப்பொழுது கேட்டாலும் சிலிர்த்திடும் இதம்.. "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்".. பாடல் வரிகள் பரவசம்!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE