பிலிம் நியூஸ் ‘ஆனந்தன்' வாழ்க்கை

By மினி சினி

வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்தன். ஐம்பதுகளின் துவக்கத்தில் மகன் ஆசைப்படுகிறான் என்பதற்காக மூவாயிரம் ரூபாய் கொடுத்து புத்தம் புது ரோலிஃப்ளெக்ஸ் கேமரா (ஜெர்மன் தயாரிப்பு) வாங்கிக் கொடுத்தார் ஆனந்தனின் அப்பா ஞானசாகரம். அவர் ஏ,ஜி'ஸ் அலுவலகத்தில் துணை அக்கவுண்டென்ட் ஜெனெரல் ஆக பதவி வகித்தவர். ஆனந்தனின் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஒருநாள் அப்பா வாங்கிக் கொடுத்த புது கேமராவோடு, நியூடோன் ஸ்டுடியோவுக்குப் போனார் ஆனந்தன். “அங்கே ‘ராஜா ராணி’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஓர் ஓரமாக வயசான ஒருவர் ஈசி சேரில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்த போது இன்ப அதிர்ச்சி! தயக்கத்துடன், "உங்களை போட்டோ எடுத்துக் கொள்ளலாமா? என்று தமிழில் கேட்டேன். அவர், என்னை நேருக்கு நேர் பார்த்து, "Of course you can take" என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அன்று நான் படமெடுத்த முதியவர் (மேக்-அப்பில் இருந்தவர்) யார் தெரியுமா? சிவாஜி கணேசன்!" என்று எண்பது வயதில் கூட உற்சாகத்துடன் பழைய அனுபவங்களை நினைவு கூறுவார்.

‘கெய்ரோ’ திரைப்பட விழாவில் (1959) ‘வீரப்பாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்டு, இந்தியா திரும்பியவுடன், சிவாஜிக்கு சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் , ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார் ஆனந்தன். சிவாஜியின் சம்மதம் பெற்றுவிட்ட சூழ்நிலையில், விழாவை நடத்த ஓட்டல் கிடைக்கவில்லை. கடைசியில், சிவாஜியிடம் நிலைமையை விளக்கிச் சொல்லி, தன் வீட்டின் பெரிய மொட்டை மாடியில் ஷாமியானா போட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள, பாராட்டு விழாவை நடத்தி ஜமாய்த்து விட்டார் ஆனந்தன். அந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து சிவாஜி தெரிவித்த சில கருத்துக்கள் தமிழகத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தின.

எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயம், வித்வான் லட்சுமணன் மூலமாக ஆர்.எம். வீரப்பனோடு ஆனந்தனுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலமாக, அந்தப் படத்தின் ஸ்டில்களைப் பெற்று, எல்லா பத்திரிகைகளுக்கும் வினியோகித்து, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே, எம்.ஜி.ஆரின் இரட்டை வேட புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளிவரச் செய்துவிட்டார் ஆனந்தன். அந்த புகைப்படங்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்களாம்.

அது மட்டுமில்லை, இது எம்.ஜி.ஆரையே வியப்பில் ஆழ்த்தியது. இதற்குக் காரணமானவர் ஆனந்தன் என்பதை அறிந்து, அவரைப் பாராட்டிய எம்.ஜி.ஆர். பட ரிலீசின் போது, பத்திரிகையாளர்களுக்கான காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பையும் ஆனந்தன் வசமே ஒப்படைத்தார். அதன் பிறகு பல்லாண்டுகளுக்கு, படத்துக்கு யார் பி.ஆர்.ஓ. என்றாலும், பிரஸ் ஷோவுக்கான ஏற்பாடுகளை ஆனந்தன் தான் செய்ய வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் உத்தரவு. அதேபோல, பிரஸ் ஷோ நடந்த மறுநாள் காலை ஆனந்தனுக்கு ஃபோன் செய்து, படம் பற்றி முக்கியமான பத்திரிகையாளர்களின் கருத்து என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்வது எம்.ஜி.ஆரின் வழக்கம்.

சினிமா செய்திகளை சேகரித்து பத்திரிகைகளுக்குக் கொடுத்ததால் அவருக்கு “பிலிம் நியூஸ் ஆனந்தன்” என்று பெயர் வந்தது என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், அதற்குக் கூட ஒரு சுவையான கதை உண்டு. ஒரு புகைப்படக்காரராக பல ஸ்டூடியோக்களுக்கும் சென்று எடுக்கிற புகைப்படங்களையெல்லாம் பிரிண்ட் போட்டு, அழகான ஆல்பங்களில் ஒட்டி வைப்பது ஆனந்தனின் பழக்கம். படமெடுக்க ஸ்டுடியோக்களுக்கு அவர் தன் காரில் தான் போவார். அப்படி ஸ்டுடியோ ரவுண்டு செல்லும்போது, அந்த ஆல்பங்களை தனது காரிலேயே வைத்திருப்பது அவரது பழக்கம்.

ஒரு நாள், பாண்டிபஜாரில் தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பரான தேவராஜன் என்பவரை சந்தித்த போது, அவர், ஆனந்தனின் ஆல்பங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். "நான் 'பிலிம் நியூஸ்' என்று ஒரு சினிமா மாதப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறேன். நீ எடுக்கும் புகைப்படங்களை என் பத்திரிகைக்குக் கொடு" என்றார் தேவராஜ். பிலிம் நியூஸ் பத்திரிகையின் தீவிர வாசகரான ஆனந்தன், அந்தப் பத்திரிகையின் ஆஸ்தான புகைப்படக்காரர் ஆனார். "ஃபிலிம் நியூஸ் பத்திரிகைக்காக இந்த புகைப்படங்களை பிரத்யேகமாக எடுத்தவர் "பிலிம் நியூஸ் ஆனந்தன்" என்று ஸ்பெஷலாக முக்கியத்துவம் அளித்து, ஆனந்தன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகத் துவங்கின. இப்படியாகத்தான் வெறும் ஆனந்தன், 'பிலிம் நியூஸ் ஆனந்தன்' ஆனார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE