நடிகை சாய் பல்லவி, ‘வி த விமன்’ (We The Women) நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் பர்க்கா தத்துடன் கலந்துரையாடியபோது, மேக்கப், சுய பிம்பம் மற்றும் சமூக அழுத்தங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இயற்கையான சரும நிறம் குறித்து மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடிய தயாரிப்புகளை விளம்பரப்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், ரூ.2 கோடி மதிப்பிலான ஃபேர்னஸ் கிரீம் விளம்பர வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறினார். வார்த்தைகளை விட செயல்கள் மூலமாகத் தனது கொள்கைகளை வெளிப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
திரைப்பயணத்தின் தொடக்கத்தில் தனக்குப் பல தாழ்வு மனப்பான்மைகள் இருந்ததாகக் கூறிய சாய் பல்லவி, இயல்பான தோற்றத்துடன் திரையில் தோன்றுவதையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பின்னர் உணர்ந்ததாகத் தெரிவித்தார். அதேநேரத்தில், மேக்கப் அணிவதும் அணியாமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் விளக்கினார்.
சிறுவயதில் சரும நிறம், முகப்பருக்கள் மற்றும் உடல் முடிகள் தொடர்பாகத் தனக்கு ஏற்பட்ட கவலைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார். பெண்கள் எப்போதும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்பு தனது சுய பிம்பத்தைப் பாதித்ததாகவும் கூறினார்.
தற்போது முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பதால், சிறுவயதில் தான் எதிர்பார்த்த ஆதரவும் புரிதலும் மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுப்பது முக்கியம் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.