நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி காலணி அணியாமல் இருப்பதற்கான காரணம் குறித்து அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி சமீபத்தில் நடைபெற்ற ‘அப்பா குட்டி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகப் பேசியுள்ளார். தங்களது மறைந்த மகள் மீரா ஆசையாகப் பயன்படுத்திய காலணிகள் வீட்டில் அப்படியே இருப்பதைப் பார்த்த பிறகு, இனி தனது வாழ்நாள் முழுவதும் காலணி அணிவதில்லை என்று விஜய் ஆண்டனி முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகளின் நினைவாக அவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தையும் விஜய் ஆண்டனி இன்றளவும் தனது கையில் அணிந்து வருவதாக ஃபாத்திமா கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். மகள் மீதான விஜய் ஆண்டனியின் பாசத்தையும், அவரை இழந்த துயரத்தையும் வெளிப்படுத்தும் இந்தத் தகவல் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. தந்தை – மகள் இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் கதைக்களமும் விஜய் ஆண்டனியின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது