நடிகை மிருணாளினியின் கணவர் மகா விஷ்ணு யார்?

By சினி மினி

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை மிருணாளினி ரவி, தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் தங்களது நிச்சயதார்த்தத்தைப் புகைப்படங்களுடன் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி மலேசியாவின் லங்காவி தீவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் இந்து முறைப்படி எளிமையாக நடைபெற்றுள்ளது. பட்டுப் புடவையில் மணப்பெண்ணாக ஜொலித்த மிருணாளினியும், பாரம்பரிய உடையில் மகா விஷ்ணுவும் இருக்கும் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் வாழ்க்கையின் பிரார்த்தனைகளுக்குக் கிடைத்த அழகான பதில் நீதான்” என்ற உணர்வுப்பூர்வமான வரிகளுடன் நவம்பர் 15-ஆம் தேதியைத் தங்களின் சிறப்பான நாளாகப் பகிர்ந்துள்ளார்.

மணமகன் மகா விஷ்ணு, ஆன்மிகப் பேச்சாளராக அறியப்படுபவர். பரம்பொருள் அறக்கட்டளை மூலம் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வந்துள்ளார். இருவரும் சுமார் ஏழு ஆண்டுகளாக நண்பர்களாகப் பழகி வந்ததாகவும், அந்த நட்பு பின்னர் காதலாக மாறியதாகவும் மகா விஷ்ணு தனது நிச்சயதார்த்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

மிருணாளினி ரவியைப் பொறுத்தவரை, சினிமாவுக்கு வருவதற்கு முன்பே டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்ட குறும்பட வீடியோக்கள் மூலம் கவனம் பெற்றவர். 2019-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் ஏலியன் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘சாம்பியன்’, ‘எனிமி’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஜாங்கோ’, ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். விஜய் ஆண்டனியுடன் நடித்த ‘ரோமியோ’ திரைப்படமும் இவரது குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்று.

நட்பில் தொடங்கி காதலாக மலர்ந்து, தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள மிருணாளினி ரவி – மகா விஷ்ணு தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புதுமணத் தம்பதியின் வாழ்க்கை அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய நாமும் வாழ்த்துவோம்!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼