நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம்.. மணமகன் யார்?

By சினி மினி

மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை அஞ்சு குரியன். நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர், தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகை அஞ்சு குரியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷன் என்பவர்தான் அஞ்சு குரியனின் வாழ்க்கைத் துணை.

இவர்களது திருமணச் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

தங்களது திருமணத்துக்குப் பின்னணியில் இருந்த சுவாரஸ்யமான விஷயத்தையும் அஞ்சு குரியன் பகிர்ந்துள்ளார். திருமண தகவல் இணையதளம் (Matrimony) மூலமாகத்தான் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இருவருக்கும் பொதுவான நண்பர்கள் இருந்ததால் ஏற்கெனவே ஓரளவுக்கு ஒருவரையொருவர் அறிந்திருந்ததாக அஞ்சு தெரிவித்துள்ளார்.

இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மற்றொரு விஷயம் மணமகன் ரோஷன் கூறிய தகவல்தான்!

பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த ரோஷன், திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் ஒரு விவசாயி. அதாவது பிளான்டர் (Planter)” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பொதுவாகப் பலரும் தங்களது தொழிலைப் பற்றிப் பேசும்போது தயக்கம் காட்டும் சூழலில், தான் ஒரு விவசாயி என்பதை எந்தவிதத் தயக்கமும் இன்றி பெருமையுடன் தெரிவித்த ரோஷனின் நேர்மையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, விவசாயத்தைப் பெருமையாகக் கருதி வெளிப்படையாகப் பேசிய அவரது அணுகுமுறை சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

திருமண வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நடிகை அஞ்சு குரியன் – ரோஷன் தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயம் என்பது பெருமைக்குரிய தொழில் என்பதைத் தனது அறிமுகத்தின் மூலமே அழகாக உணர்த்தியிருக்கிறார் ரோஷன்!

புதுமணத் தம்பதிக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼