பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கும், தயாரிப்பாளர் மகள் காவ்யா மாறனுக்கும் நாளை மறுநாள் க்ரீஸ் நாட்டில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் நடிகருமான உதயநிதியும் க்ரீஸ் நாட்டுக்கு சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஆண்ட்ரியாவுடனான காதல் முறிவுக்கு பிறகு பாடகி ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார் அனிருத். அவரது திருமணம் குறித்து தந்தை ரவியும் பெரியளவில் பொதுவெளியில் பேசாமல் தவிர்த்தார். அவர் சிங்கிளாகத்தான் இருப்பாரோ என்று பலரும் பேசினார்கள். ஆனால் அனியோ யாருக்கும் தெரியாமல் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்திருக்கிறார். இரண்டு பேரின் குடும்பமும் ஏற்கனவே நல்ல பழக்கம் என்பதால்; உடனடியாக திருமணத்துக்கு சம்மதமும் கிடைத்தது.
பெண்ணே பரிசு: கலாநிதி மாறன் தயாரித்த பீஸ்ட், கூலி, ஜெயிலர், ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு அனிருத்தான் இசை. அந்தப் படங்களின் பாடல்களும், இசையும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக அனிருத்துக்கு வெளிநாட்டு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் கலாநிதி. இப்போதோ ஜெயிலர் 2 வெற்றிக்காக தனது மகளையே பரிசாக கொடுக்கிறார் என்று ஏகப்பட்ட ஜாலி கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது.
அனிருத் சிம்ப்பிள்தான்: தென்னிந்தியாவின் பெரிய திருமணம் என்ற பெயரையும் இது பெற்றிருக்கிறது. அரசியல் பிரமுகர்கள், முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் என விஐபிக்களும், விவிஐப்பிக்களுக்கும் பத்திரிகைகள் சென்றிருக்கின்றன. அவர்கள் அனைவரும் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் ரிசப்ஷனில் பங்கேற்கிறார்கள். திருமணம் க்ரீஸ் நாட்டில் பிரமாண்டமாக நடக்கிறது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே அதில் கலந்துகொள்கிறார்கள்.
இவ்வளவு பிரமாண்டமான திருமணத்தின் ஹீரோவான அனிருத் ரொம்பவே சிம்ப்பிளாக தனது பாதையில் செல்கிறார். சமீபத்தில்கூட ஒரு ஈவென்ட்டில் கலந்துகொண்டார்; அதனைத் தொடர்ந்து டேர்டெவில் படத்தின் பூஜையில் கலந்துகொண்டார். நாளை மறுநாள் திருமணம் நடக்கவிருப்பதால் இங்கிருந்து க்ரீஸ் நாட்டுக்கு செல்லும் வேலைகளும் மெல்ல மெல்ல தொடங்கியிருக்கின்றன.
ஸ்டாலின், உதயநிதி: அதன்படி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது மனைவி துர்காவும் இன்று க்ரீஸ் நாட்டுக்கு விமானம் மூலம் சென்றிருக்கிறார்கள். ஸ்டாலின் கோட் அணிந்தும், உதயநிதி ஒரு டிஷர்ட், பேண்ட்டோடு கூலாக இருந்தார்கள். அவர்கள் சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
ஜெயிலர் 2 பாடலை அதில் எடிட் செய்து பரப்பிவருகிறார்கள் திமுகவினர். அனிருத் இனிமேல்தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனியின் திருமணத்துக்கு பிரபலங்கள் செல்ல தொடங்கியிருப்பதால்; பலரது கவனம் இப்போது அவ்விஷயம் மீது திரும்பியிருக்கிறது.
அதேபோல், ரிசப்ஷனுக்கு நிச்சயமாக முதலமைச்சர் விஜய், நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் ஆகியோர் எல்லாம் வருவார்கள். விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இப்போது ஏழாம் பொறுத்தம். தனுஷும், நயனும் ஏற்கனவே தங்களுக்குள் ஏழரை இழுத்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அனியின் திருமணத்தில் சங்கமிக்கும்போது ஒருவரையொருவர் பார்க்கும் சூழலும் உருவாகலாம். இருப்பினும் அனிக்கு வருகிறார்கள் என்றால் அவர் அனைவருக்கும் செல்ல பிள்ளை என்றே கொள்ளலாம்.