கல்யாண வீட்டில் கச்சேரி நடத்திய யுவன்!

By சினி மினி


யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவே படங்களை தேடி பிடித்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அவருடைய பாடல்கள் என்றாலே இளைஞர்கள் மத்தியில் தனி கொண்டாட்டம் இருக்கும்.

அப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜா இப்போது துரைமுருகன் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி வீட்டு கல்யாண நிகழ்ச்சியில் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் இந்த வீடியோவை பார்த்து வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், இன்னும் சிலரோ இதில் வருத்தப்படுவதற்கோ, விமர்சனம் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கல்யாண வீட்டில் யுவன் பாட்டு

சமீபத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமண விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின், கனிமொழி, கவிஞர் வைரமுத்து, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். சினிமா துறை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் பங்கேற்று பாடி இருக்கிறார். அவர் மேடையில் பாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.யுவன் சங்கர் ராஜாவை பொருத்தவரை அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தை தாண்டி, தனது தனித்துவமான இசையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். காதல், சோகம், நட்பு என எந்த உணர்வாக இருந்தாலும் யுவனின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்ப்பு உண்டு. 90ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் 2கே கிட்ஸுகளுக்கும் யுவனின் பாடல்கள் நெருக்கமானவை.

சமீபத்தில் ஜேசன் சஞ்சய் கூட, எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி நான் யுவன் பாடலை தான் கேட்பேன். நான் அவருடைய மிகப்பெரிய ஃபேன் என்று சொல்லி இருந்தார். இப்படி பலருடைய ஃபேவரிட் ஆக இருக்கும் இவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பாடியதை ரசிகர்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய இசை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் தனது இசையால் ரசிகர்களால் உற்சாகப்படுத்திய யுவன் இப்போது கல்யாண மேடையில் பாட வேண்டிய நிலை வந்து விட்டதே என்று வருத்தத்தோடு கமெண்ட் போடுகின்றனர்.ரசிகர்களுக்குள் விவாதம்

ஆனால் இன்னும் சில தீவிரமான ரசிகர்களோ இதில் வருத்தப்பட என்ன இருக்கு? அவர் அந்த நிகழ்ச்சிக்கு போன இடத்தில் மணப்பெண்ணோ, அல்லது மாப்பிள்ளையோ யுவனின் தீவிரமான ரசிகர்களாக இருக்கலாம்... அவர்களுக்காக யுவன் பாட்டு பாடி இருக்கலாம். இதில் எந்த தவறும் இல்லையே? இது ஏதோ நடக்க கூடாதது நடந்து விட்டது என்பது போல சோக மியூசிக் எல்லாம் போட்டு ஏன் இப்படி யுவனை ட்ரோல் பண்றீங்க? என்று கேள்விகளும் எழுப்புகிறார்கள். எது எப்படியோ யுவன் வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்களே அவர் மீது வைத்திருக்கும் பாசம், அன்பை விவாதமாக காட்டி வருகிறார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼