தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான உடல்மொழி, முகபாவனைகள், மிமிக்ரி திறமை ஆகியவற்றால் ரசிகர்களைச் சிரிக்க வைத்தவர் நடிகர் தாமு. குறிப்பாக நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த படங்களிலும், விவேக்குடன் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகளிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர்.
ஆனால், திரையில் நகைச்சுவை நடிகராகப் பார்த்த தாமுவுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவுரையை ஏற்று, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார்.
சினிமாவில் தனி அடையாளம்!
இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தாமு, தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் ஒட்டேரி நரி கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவை இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. ‘பத்ரி’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘வில்லு’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் விவேக்குடன் இணைந்தும் பல திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
அப்துல் கலாம் கொடுத்த அறிவுரை!
தாமுவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்துல் கலாமுடனான சந்திப்பு.
கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு கலாம் அவர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டபோது, அங்கு காத்திருந்த மக்களைத் தனது மிமிக்ரி நிகழ்ச்சியின் மூலம் சுமார் மூன்று மணி நேரம் மகிழ்வித்துள்ளார் தாமு.
இதனை அறிந்த கலாம் அவர்கள், மக்களிடம் உனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது; உனது திறமையை மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகத் தாமு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவுரையே தனது கல்விச் சேவைக்கான முக்கியத் தூண்டுதலாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.
20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுதல்!
2011-ஆம் ஆண்டு சர்வதேச பெற்றோர் ஆசிரியர் மாணவர் பேரவை (IPTSA) என்ற அமைப்பைத் தொடங்கி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கல்வி சார்ந்த வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார்.
இந்த அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் வழங்கியுள்ளதாகத் தாமு தெரிவித்துள்ளார்.
அவரது கல்விச் சேவையைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டு ‘ராஷ்டிரிய சிக்ஷா கௌரவ் புரஸ்கார்’ என்ற தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது. அந்த விருதைத் தனது வழிகாட்டியான அப்துல் கலாமுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
திரையில் தனது நகைச்சுவையால் மக்களைச் சிரிக்க வைத்த ஒரு கலைஞர், திரைக்கு வெளியே மாணவர்களின் எதிர்காலத்திற்காக உழைத்து வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.