தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல நல்ல கதைகளை கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். குறிப்பாக, சிறிய பட்ஜெட்டில் உருவாகும் தரமான திரைப்படங்களுக்கு ஆதரவளிப்பதுடன், புதுமுக இயக்குநர்கள் மற்றும் திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய சிவகார்த்திகேயன், சிறிய படங்களின் வெற்றி, புதிய திறமைகளுக்கு வாய்ப்பளிப்பது மற்றும் விமர்சனங்களை அணுகும் விதம் குறித்து பேசியுள்ளார்.
சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், எப்போதுமே ஒரு படம் வெற்றி பெறுகிறது என்பது ரொம்ப சந்தோஷமான விஷயம். பெரிய படம், சின்ன படம் என்று நாம் பிரித்து பார்ப்பது பட்ஜெட்டை வைத்துத்தான். ஆனால், ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பதை அதன் வெற்றிதான் முடிவு செய்யும். நிறைய சின்ன படங்கள் வெற்றி பெறும்போது, அது பெரிய படங்களுக்கும் பிளஸ் ஆக அமையும். அதுமட்டுமில்லாமல், புதிய டெக்னீஷியன்கள், திறமையான கலைஞர்கள் மற்றும் இயக்குநர்கள் சினிமாவுக்குள் வருவதற்கு இதுபோன்ற படங்கள் பெரிய வாய்ப்பாக அமைகின்றன. நல்ல கதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதற்கும் இதுபோன்ற முயற்சிகள் மிகவும் அவசியம் என்றார்.
தியேட்டரில் படம் பார்க்க வேண்டும்: ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு சிறிய படங்களை திரையரங்குகளில் பார்க்காமல், ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடமும் உருவானதாக குறிப்பிட்ட சிவகார்த்திகேயன், தற்போது நல்ல படங்களை திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தான் தயாரித்த 'தாய்கிழவி' படத்துக்கு கிடைத்த வரவேற்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து சிறை, டூரிஸ்ட் ஃபேமிலி, தாய்கிழவி போன்ற படங்கள் வெற்றி பெறுவது, இதுபோன்ற தரமான கதைகளை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், சிறிய படங்களின் வெற்றி மூலம் புதிய எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்த முடிவதாகவும், தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகுவதாகவும் பேசினார்.
நெகட்டிவ் விமர்சனம்: சிறிய படங்கள் நன்றாக உருவாகும்போது, அவற்றை பாராட்டுவதில் சிவகார்த்திகேயன் எப்போதும் முன்வருவதாகவும், அதற்காக அவருக்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். இதற்கு பதிலளித்த அவர், பாராட்டுவதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, உலகத்திலேயே ரொம்ப நல்ல விஷயம் அடுத்தவர்களைப் பாராட்டுவதுதான். ஒரு சின்ன படம் நன்றாக வந்தால்கூட, அதை பாராட்டுவதற்கு நாம் முன்வர வேண்டும். ரஜினி சாரை நான் போனில் அழைத்துப் பாராட்டியதுகூட அப்படித்தான். அவரிடம் போன் செய்து, 'சார், படம் பயங்கரமாக இருக்கு சார்' என்று சொன்னேன். நான் அவருடைய ரசிகன். ஒரு ரசிகனாக நாம் என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் செய்தேன்.
இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவே கூடாது, நான் ரஜினியை நேரில் அழைத்து பாராட்டியது போல ஒரு போலி வீடியோவை வெளியிட்டு நெகட்டிவாக கிண்டல் செய்து வருகிறார்கள் அதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து கிடைக்கும் நேர்மறையான கருத்துகளை விட்டுவிட்டு, முகம் தெரியாதவர்களிடம் இருந்து வரும் எதிர்மறையான கருத்துகள் நம்மை எப்படிப பாதிக்க முடியும்? என சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.