ரீல்ஸ்ல கலக்கிய மோனிஷா ப்ளெஸ்ஸி… ரஜினி, விஜய் ஹீரோக்களுடன்...

By மினி சினி

சினிமா பின்னணி இல்லாமல், பள்ளி நாட்களில் மேடையில் செய்த ஒரு Mime performance மூலம் கிடைத்த கைதட்டல்தான் மோனிஷா ப்ளெஸ்ஸியின் சினிமா கனவுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. சென்னை பிறந்த மோனிஷா, பள்ளிப் படிப்பிலேயே ஒரு நாள் VJ நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், பின்னர் Electronic Media படித்து ஊடகத்துறையில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியான Mime மற்றும் Concept வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றத் தொடங்கிய மோனிஷா, ‘Kalakka Povathu Yaaru? Season 8’ நிகழ்ச்சியில் போட்டியிட்டு Runner-up ஆனார். அதன்பிறகு ‘Cooku With Comali’ Season 4 மூலம் அவருடைய நகைச்சுவை திறமை இன்னும் அதிகமான ரசிகர்களிடம் சென்றது. சின்னத்திரையில் கிடைத்த இந்த பிரபலம்தான் வெள்ளித்திரைக்கான கதவை அவருக்கு திறந்தது.

அவருடைய சினிமா அறிமுகம் ‘மாவீரன்’ மூலம் அமைந்தது. சிவகார்த்திகேயனின் தங்கையாக ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மோனிஷா, கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் கதையோடு பயணிக்கும் ஒரு முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்பியதாக கூறியிருந்தார். பல ஆண்டுகளாக பல auditions-ல் முயற்சி செய்த பிறகுதான் இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், இயக்குநர் மடோன் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவினரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு ‘Modern Love Chennai’, ‘சுழல் – The Vortex’ உள்ளிட்ட OTT படைப்புகளிலும் நடித்தார். குறிப்பாக சுழல் தொடரின் இரண்டாவது சீசனிலும் இடம்பெற்றது, திரைப்படங்களைத் தாண்டி வெப் சீரிஸிலும் தனது நடிப்பை காட்டுவதற்கான வாய்ப்பை அவருக்கு கொடுத்தது.

அதன்பிறகு வந்த ‘Coolie’ மோனிஷாவின் பயணத்தில் இன்னொரு பெரிய வாய்ப்பு. ரஜினிகாந்த் நடித்த இந்தப் படத்தில் சத்யராஜின் மூன்றாவது மகளாகவும், ஸ்ருதி ஹாசனின் சகோதரியாகவும் வரும் பிரியா கதாபாத்திரத்தில் நடித்தார். குறிப்பாக ரஜினிகாந்துடன் combination scenes கிடைத்தது தனக்கு மிகப்பெரிய அனுபவம் என்று அவர் கூறியிருக்கிறார். முதல் shot-ஐயே ரஜினிகாந்துடன் நடித்ததாகவும், படப்பிடிப்பில் அவருடைய எளிமை தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் மோனிஷா பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வாய்ப்பு கிடைத்தபோது முதலில் இதை நம்பவே முடியவில்லை என்றும், கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். ஒரே காலகட்டத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றிய அனுபவம், வளர்ந்து வரும் நடிகையான மோனிஷாவுக்கு நிச்சயம் ஒரு முக்கியமான மைல்கல்.

‘ஹீரோயினாகத்தான் நடிக்க வேண்டும்’ என்ற ஒரே பாதையைத் தேடாமல், தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் கதையில் அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன் என்ற எண்ணத்தில் பயணிக்கும் மோனிஷா, இப்போது தனக்கான நடிகை என்ற அடையாளத்தை உருவாக்கி வருகிறார். ரீல்ஸ் மற்றும் சின்னத்திரையில் ஆரம்பித்த பயணம், இன்று பெரிய திரை மற்றும் OTT வரை சென்றிருப்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான வளர்ச்சிதான்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE