தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தயாரித்து, இயக்கிய முன்னணி மூத்த நடிகர் மோகன் சர்மா அவர்களின் தற்போதைய வாழ்க்கைச் செய்தி பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படப் பயிற்சி மையமான பூனே FTII (Film and Television Institute of India)-ல் நடிப்புப் பயிற்சி பெற்ற *முதல் தென்னிந்தியர்* என்ற பெருமை மோகன் சர்மா அவர்களையே சாரும். தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் உயரிய திரைப்பட விருதுகளைப் பெற்ற இவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் (Film Chamber) தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
வெள்ளித்திரையில் பார்த்திபன் கனவு, அப்பு, சச்சின், சுயம்வரம் போன்ற படங்களில் நடித்தது போலவே, சின்னத்திரையிலும் இவர் முத்திரை பதித்தவர். குறிப்பாக, தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மாபெரும் வெற்றி பெற்ற 'கோலங்கள்' சீரியலில், கதாநாயகி அபிக்கு (தேவயாணி) தந்தையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்!
இவரது வாழ்க்கைச் பயணத்தில் நடிகை லட்சுமியுடனான திருமணமும் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயம். திருமணம் ஆகாத நிலையில் இருந்த மோகன் சர்மா வீட்டிற்கு ஒருநாள் நடிகை லட்சுமி ஒரு நாய்க்குட்டியுடன் சென்று, "இந்த நாய்க்குட்டியைப் போல உங்களையே சுற்றி வருவேன், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" எனக் கேட்க, அதை ஏற்று மோகன் சர்மா குங்குமமிட்டு லட்சுமியை மனைவியாக ஏற்றுக் கொண்டாராம். பின்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் அவர் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பேசிய மோகன் சர்மா அவர்கள்:
"நான் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு யார் மீதும் எந்தக் குறையும் இல்லை. வயது மூப்பு மற்றும் தளர்ச்சி காரணமாக, மன அமைதிக்காக நானே தான் விருப்பப்பட்டு இந்த இல்லத்தில் தங்கியுள்ளேன். எனது மருத்துவ மற்றும் தனிப்பட்ட தேவைகளை நண்பர்களும் நலவிரும்பிகளுமே பார்த்துக்கொள்கிறார்கள்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில் வீடு விற்பனை தொடர்பான பிரச்சனை ஒன்றில் காரில் சென்றபோது சிலர் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஒரு மகத்தான கலைஞனின் இந்த அமைதியான வாழ்வியல் முடிவு, காலத்தின் விசித்திரமான மாற்றங்களை நமக்கு நினைவூட்டுகிறது!