முதல்வர் ஆவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நேரடியாக நட்சத்திரமாகவே சினிமாவுக்கு வருவேன் என யாரேனும் கூறினால் அவன் விவரம் தெரியாதவன் எனவும், முழு நேரமும் அரசியலில் ஈடுபட மாணவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.
கொடுக்கும் கை நீட்டினால் தான் வாங்கும் கை நீளும் என்றும், அரசியல்வாதி லஞ்சம் வாங்கினால் அதில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது. ரீல்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை, அது உந்துகோல் மட்டுமே.. தினமும் பசிப்பது போல அரசியலும் நம் அன்றாட நடவடிக்கையாக இருக்க வேண்டும்.. எனவும் கமல்ஹாசன் பேசினார்.
ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை
செஞ்சி அருகே பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்வர் ஆவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. நேரடியாக நட்சத்திரமாகவே சினிமாவுக்கு வருவேன் என யாரேனும் கூறினால் அவன் விவரம் தெரியாதவன். தினமும் பசிப்பது போல அரசியலும் நம் அன்றாட நடவடிக்கையாக இருக்க வேண்டும். முழு நேரமும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை. ஒருவர் பின்னால் மந்தையாக சென்றால் எந்த பயனும் இல்லை.
லஞ்சம் வாங்க காரணம்
அரசியல்வாதி மோசமாக லஞ்சம் வாங்குவார் என்றால் அதில் உங்கள் பங்கும் உள்ளது. சுயநலக்காரர்கள் கையில் ஏஐ உள்ளது. ஏஐயை மாணவர்கள் அளவாக பயன்படுத்த வேண்டும். என்னுடைய ரோடு பள்ளமாக இருக்கிறது என்றால் அதற்கு நான் காரணமா? என்று யோசித்து பாருங்கள். கண்டிப்பாக நீங்களும் காரணம். அரசியல்வாதி மோசமாக இருக்கிறார்.. லஞ்சம் வாங்குகிறார் என்றால் அதில் உங்கள் கையும் உள்ளது. கொடுக்கிற கை நீண்டால்தான் வாங்குகிற கை நீளும். அப்படி இருக்கும் போது எல்லோரும் நல்லவங்கள்தானே, நாம் வேலையை பார்த்துவிட்டு சந்தோஷமாக இருந்துவிடலாம் என்றால் முடியாது.
தினமும் பசிக்கும் தினமும் சாப்பிட வேண்டும். அதே மாதிரி அரசியல் தினசரி பழக்கமாக இருக்க வேண்டும். அரசியலை கவனிக்கவாவது செய்யுங்கள். யாராவது பார்த்துப்பார்கள் என்று விட்டீர்கள் என்றால் யாருமே பார்க்க மாட்டாங்க.. திடீரென்று தலையில் இடி விழும் போது தெரியும். ஏன் விழுந்தது என்று கேட்பீர்கள். நீங்களாகத்தானே கீழே கிடந்த மண்ணை தலையில் வாரி போட்டீர்கள்.. நீங்கள்தான் காரணம் என்று வழிப்போக்கன் போய்க்கொண்டே இருப்பான்" என்றார்.