விருதுநகர் மாவட்டத்தில் 1927ம் ஆண்டு பிறந்தவர்தான், எஸ்.என் லட்சுமி என அழைக்கப்பட்ட லட்சுமி பாட்டி. பழமையான பழைய திரைப்படங்கள் முதல் புதிய திரைப்படங்கள் வரை பல்வேறு படங்களில் நடித்து கலக்கியவர்தான் எஸ்.என் லட்சுமி. சென்னெல்குடி நாராயணன் லட்சுமி என்ற பெயரின் சுருக்கம்தான் எஸ்.என் லட்சுமி என்பதாகும்.
6000 நாடகங்களிலும் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர் எஸ்.என் லட்சுமி. இவர் 11 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர் இவரது தந்தைக்கு 13 வது குழந்தை, இவர்களது குடும்பம் இவரின் தந்தை மறைவுக்கு பிறகு சென்னெல்குடியிலிருந்து அருகில் உள்ள விருதுநகருக்கு குடிபெயர்ந்தார்கள். இவரது அன்னை அருகில் உள்ள உணவகங்களிலும் கோவிலிலும் வேலை செய்து வந்த நிலையில் எஸ்.என் லட்சுமியின் கலைத்திறமையை கண்ட பக்கத்து வீட்டுக்காரரான ஒரு நடன கலைஞர், லட்சுமியை ஒரு நாடக குழுவில் சேர்த்து விட்டார், நாடகம் நடத்த அவர்கள் ஊர் ஊராக போனபோது, ஒருமுறை மன்னார்குடிக்கு சென்றார்கள். மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல நினைத்த எஸ்.என் லட்சுமி சிலரது உதவியால் அங்கிருந்து சென்னைக்கு ரயில் ஏறினார்.
சென்னைக்கு வந்த எஸ்.என் லட்சுமி பாட்டியை ஒரு லாரி ஓட்டுனரின் மனைவி பரிதாபப்பட்டு ஜெமினி ஸ்டுடியோவில் சேர்த்து விட்டார் அங்கு சேர்ந்து கஷ்டப்பட்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னாட்களில் பெரிய நடிகையாக வளர்ந்தார்.ஏழெட்டு வருடங்கள் கழித்துதான் இவரை இவரது குடும்பத்தினர் கண்டுபிடித்திருக்கிறார்கள், அதாவது 11 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஜெமினி ஸ்டுடியோவில் சேர்ந்த பிறகு சின்ன சின்ன வேடங்கள் குரூப் டான்சர்களில் ஒருவர் இதுபோலத்தான் இவருக்கு கிடைத்தது. இதனால் இவருக்கு தெரிந்த நாடகங்களில் நடிக்க தொடங்கினார். என் .எஸ் கிருஷ்ணனின் நாடக குழுக்கள், எஸ்.வி சகஸ்ரநாமத்தின் நாடக குழுக்கள், பாலச்சந்தரின் நாடக குழு போன்றவற்றில் இணைந்து நடித்து வந்தார்.
இவர் ஜெமினி ஸ்டுடியோவில் இருந்த காலத்தில் அவர்கள் எடுத்த பிரமாண்ட படமான சந்திரலேகாவில் அறிமுகமானார், பிறகு டாக்டர் சாவித்ரி, நல்லதங்காள்,தாமரைகுலம் , எங்கள் குல தேவி உட்பட பல படங்களில் நடித்தார். தொடர் நாடக நடிப்பு, சினிமா நடிப்பு மூலம் புகழ்பெற்ற எஸ்.என் லட்சுமி 1959லேயே சென்னை ராயப்பேட்டையில் வீடு வாங்கினார், அதற்கு பின் சில ஆண்டுகளில் மோரிஸ் எய்ட் காரையும் வாங்கினார். இவர் கார் ஓட்டுவதில் கில்லாடி, ஒரு வாலிப துடிப்பான இளைஞர் கார் ஓட்டுவது போல அசால்டாக கார் ஓட்ட தெரிந்தவர் எஸ்.என் லட்சுமி பாட்டி.
தொடர்ந்து 1960கள் தொடங்கி 2011 வரை செம ஆக்டிவாக சினிமா பீல்டில் இருந்தவர் லட்சுமி பாட்டி. துலாபாரம், இருகோடுகள், சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், ரகசிய போலீஸ் 115 என அந்த நாளைய பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.
80 மற்றும் 90களில் என்னை விட்டு போகாதே, அக்னி நட்சத்திரம், மகாநதி, தங்க மனசுக்காரன், எஜமான், மைக்கேல் மதன காமராஜன், தேவர் மகன், காதலா காதலா ம் விருமாண்டி, சங்கமம், கள்ளழகர், வானத்தைப்போல என பல்வேறு படங்களில் நடித்தார்.
பின்னாட்களில் கமல்ஹாசன் தன் படங்களில் இவர் அதிகம் வருமாறு பார்த்துக்கொண்டார், தேவர்மகன் படத்தில் பங்காளி வீடாக சிவாஜி வீட்டுக்கு அருகில் இருப்பவராக நடித்திருந்தார். மகாநதியில் மாமியார் ஆக இப்படியும் அம்மாவை போல மாமியார் இருப்பார்களா என்ற ரேஞ்சுல நடித்திருந்தார்.
காதலா காதலா படத்தில் நூர்ஜஹான் என்ற வீட்டு ஓனர் பாத்திரமும் இவருக்கு நன்றாக இருந்தது. குறைந்த நிமிடமே வந்தாலும் காமெடியில் கலக்கி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மைக்கேல் மதன காமராஜனில் ஊர்வசியின் திருட்டு பாட்டியாக வந்து பொருட்களை லபக்கி செல்லும் கதாபாத்திரம் இவருக்கு நன்றாக இருந்தது. க்ளைமாக்ஸ் காட்சியில் கலக்கி இருந்தார் இவர். இது போல விக்ரமனின் வானத்தைப்போல படத்திலும் குணச்சித்திர நடிப்பை அழகாய் வெளிப்படுத்தி இருந்தார். அந்தக்கால படமான துலாபாரம் , சர்வர் சுந்தரம் போன்ற படங்களிலும் இவர் கலக்கி இருந்தார்.
திருமணம் தனக்கு விருப்பமில்லை என்று இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை, உடன் பிறந்தவர்கள் வரிசையில் வரும் பேரக்குழந்தைகளை இவர் அன்புடன் பார்த்துக்கொண்டார். 2000ங்கள் வரை சென்னை சிட்டிக்குள் அசால்டாக கார் ஓட்டி வந்த எஸ்.என் லட்சுமி தனது காலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதும் கார் ஓட்டுவதை குறைத்துக்கொண்டாராம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள சாய் கிருபா மருத்துவ மையத்துக்கு சென்று அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதை இவர் தொடர்ந்து செய்துள்ளார்.
எஸ்.என் லட்சுமி அவர்கள் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது இவருக்கு வயது 85.