சென்னையின் முதல் சினிமா?

By மினி சினி

'படம் நம்மைப் போல அசைகிறது'.... இப்படிதான் அன்றைய மக்கள் பேசாத சலன படத்தைப் பற்றி கண்கள் விரிய சொன்னார்கள். ஆரம்பக் கால சினிமா ஒரிரு நிமிடங்கள் மட்டுமே ஒடக்கூடியவையாக இருந்தன. அந்த சில நிமிட திரைப்படம் உலகமெங்கும் வலம் வந்தது. பல இடங்களில் திரையிடப்பட்டு மக்களை மாயலோகத்தில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட திரைப்படம் சென்னைக்கும் வந்தது.

சென்னை வாசிகளுக்கு சினிமா என்ற அந்த பிரமாண்டம் மிகச் சிறிய அளவில் சுவற்றில் போட்டுக்காட்டப்பட்டது. 1897-ல் எம்.எட்வர்ட்ஸ் என்ற வெள்ளைக்காரர், ரிப்பன் பில்டிங்கிற்கு அருகில் இன்றும் இருக்கும் 'விக்டோரியா மாளிகை'யில் திரையிட்டு காட்டினார். மக்கள் வரிசையில் நின்று அதை கண்டு ரசித்தனர்.

இரண்டு படங்களுமே சில நிமிடங்கள் மட்டுமே ஓடின. ஒன்று ஒரு தொழிற்சாலையில் வேலை முடிந்த தொழிலாளர்கள் கூட்டமாக வெளியே வரும் காட்சி. இந்த படத்திற்கு 'லீவிங் த பேக்டரி' என்று பெயர். இதுதான் உலகில் முதன் முதலாக எடுக்கப்பட்ட சினிமாவும் கூட.

அதற்கடுத்து திரையிடப்பட்டது 'த அரைவல் ஆஃப் த டிரெயின்' இது வேகமாக வரும் ஒரு ரயிலை படம்பிடித்தது. சினிமாவில் வரும் இந்த ரயிலை பார்த்து பயந்துபோய் எழுந்து ஓடியவர்கள் அன்றைய காலகட்டத்தில் ஏராளம். திரையில் வரும் ரயில் நம் மீது மோதிவிடும் என்று பயந்தார்கள். அது படம்தான் என்பதையே அன்றைக்கு நம்ப மறுத்தார்கள்.

'த அரைவல் ஆஃப் த டிரெயின்'

இத்தகைய சினிமாவிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து இந்த மாதிரி நிறைய படங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டன. அந்தப் படங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றைப் பார்பதற்கு ஒன்றரை பைசா கட்டணம் விதித்தார்கள். மக்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டார்கள்.

பயாஸ்கோப் என்ற படம் காட்டும் கருவி அன்று மிகவும் புகழ்ப் பெற்று விளங்கியது. வெறும் மக்னீசியம் என்ற ஒரு வஸ்த்தை வைத்து மின்சாரம் இன்றி, லைசென்ஸ் இன்றி குறைந்த செலவில் வீதி வீதியாக இதைக் காட்டினார்கள். ”பாரு பாரு பயாஸ்கோப் படத்தப்பாறு.." என்ற பாட்டையும் வைத்திருந்தார்கள். கிராமங்களில் இந்த சில நிமிட படங்களை கொண்டு சேர்த்ததில் பயாஸ்கோப் முக்கிய பங்கிருக்கிறது.

பயாஸ்கோப்:

1900-ம் ஆண்டு மக்களின் பேரார்வத்தை பார்த்து சென்னையில் வாரிக் மேஜர் என்பவர் ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதற்கு ”எலக்ட்ரிக் தியேட்டர்” என்று பெயரிட்டார். அண்ணா சாலையில் இன்றைய 'ஜெனரல் போஸ்ட் ஆஃபிஸ்' இருக்கும் இடத்தில்தான் அன்றைக்கு எலக்ட்ரிக் தியேட்டர் இருந்தது. கோஹன் என்பவர் ”லிரிக் தியேட்டர்” என்ற ஒரு தியேட்டரை அண்ணா சாலையில் நிறுவினார். சில நாட்களிலேயே அந்த தியேட்டர் தீயில் எரிந்து சாம்பலானது. அதன் பின் அதே இடத்தில் கட்டப்பட்ட தியேட்டர்தான் 'எல்ஃபின்ஸ்டோன் தியேட்டர்'. இப்படிதான் சென்னையின் சினிமா வரலாறு தொடங்கியது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE